தலச்சிறப்பு |
ஒருசமயம் இப்பகுதியில் பஞ்சம் ஏற்பட்டபோது, சுவாமியும், அம்பாளும் விவசாயி வடிவில் வந்து விதையைச் தெளித்து விட்டு சென்றனர். அப்பயிர்கள் செழித்து வளர்ந்து பஞ்சம் நீங்கியது. சுவாமி விதையைத் தெளித்துச் சென்றதால் இப்பகுதி 'தெளிச்சேரி' என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்து மூலவர் 'பார்வதீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க மூர்த்தியாக சற்று உயரமான பாணத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகின்றார். அம்பாள் வழிபட்டதால் இப்பெயர் பெற்றார். அம்பிகை 'சுயம்வர தபஸ்வினி' என்றும் 'சத்தியம்மை' என்றும் வணங்கப்படுகின்றாள்
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். பிரகாரத்தில் வள்ளி, தேவசேனை சமேத சுப்பிரமண்யர், மகாலட்சுமி, நடராஜர், நவக்கிரகங்கள், பைரவர், சூரியன், அவரது மனைவி ரேணுகா தேவி, சொக்கநாதர், நால்வர், சனீஸ்வரன் சன்னதிகள் உள்ளன.
கோயிலில் சுவாமியும், அம்பாளும் விவசாயத்திற்குச் செல்வது போன்ற உற்சவ விக்கிரகம் சிறப்பானது. இவரை 'கிராத மூர்த்தி' என்று கூறுகிறார்கள். பூர்ணா, புஷ்கலா, பிடாரி அம்மன் உள்ளிட்ட கிராம தேவதைகள், அர்ஜீனன், திரௌபதி, அறுபத்து மூவர் ஆகியோர் உற்சவ சிலைகளும் உள்ளன.
திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு வந்தபோது தமது திருக்கூட்டத்தாருடன், வாத்திய இசைகள் முழங்க வந்தார். இதனால் கோபம் அடைந்த பௌத்தர்கள் அவரை தடுக்க, சம்பந்தர் ஐந்தெழுத்து மந்திரப் பதிகத்தைப் பாட, பௌத்தர்கள் தலையில் இடி விழுந்தது. அவர்கள் ஓடிச் சென்று சாரிபுத்தன் என்பவனை அழைத்து, அவன் தலைமையில் சம்பந்தருடன் வாதிடித்து தோற்றனர். பின்னர் அனைவரும் சைவர்களாக மாறிய தலம்.
பங்குனி மாதம் 13 ஆம் தேதி முதல் பத்து நாட்கள் சூரியனின் கதிர்கள் மாலை நேரத்தில் மூலவர் மேல் விழுகின்றன.
திருஞானசம்பந்தர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 8 மணி முதல் 12.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|